இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்று இந்திய பெண்கள் அணி அபாரம்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையடி வருகிறது. இதில் காலேவில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தேடுத்தது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாத்யா 68 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி தரப்பில் ஜெயன்கானி 3 விக்கெட்களும், பிரபோத்ஹானி, வீரக்கொடி தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 48.1 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜெயன்கானி 57 ரன்களம், ஸ்ரீவர்தனே 49 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது.

Exit mobile version