தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களின் பிரதான தேர்வாக ரயில் பயணங்கள் உள்ளன. ஆனால், ரயில்களின் உள்ள எந்திரங்களில் இருந்து வரும் இரைச்சல் சில பயணிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. வயதானவர்கள், இதயநோய் உள்ளவர்கள் ரயில் பயணங்களை தவிர்க்கும் நிலையும் இதனால் காணப்படுகின்றது.
சாலைகளில் செல்லும் வாகனங்களில் பயன்படுத்தும் ஒலிப்பான்களின் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு 85 டெசிபல்தான், 90 டெசிபலுக்கு மேல் ஒலிக்கும் சத்தம் ‘ஒலிமாசு’ என்று அழைக்கப்படுகிறது. இதனால் 90 டெசிபலுக்கும் மேல் ஒலிக்கும் ஒலிப்பான்களை போக்குவரத்துக் காவல்துறை பறிமுதல் செய்கிறது.
ஆனால் ரயில்களில் மின் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் சில எந்திரங்கள் 105 டெசிபல் வரையிலான சத்தத்தை வெளியிடுகின்றன. ரயில்களில் பலநாட்கள் தொடர்ந்து பயணம் செய்பவர்கள் இந்த ஒலிமாசினால் கடும் பாதிப்பை சந்திக்கிறார்கள். ரயில்வே பணியாளர்களும் இதனால் பாதிப்படைகிறார்கள்.
இந்த அனைத்தையும் கவனத்தில் கொண்டே, ரயில்களின் இயக்கத்தில் சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரைச்சல் இல்லாத ரயில்களை வரும் டிசம்பரில் இருந்து இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு ரயிலிலும் 2 பெட்டிகளில் ஜனரேட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் அதிக ஒலிமாசை ஏற்படுத்தும் எந்திரங்கள் ரயிலில் இருந்து விடைபெறும். இந்த ஜனரேட்டர்களில் ஒன்று பயணத்தின் போதான மின் தேவைகளைப் பூர்த்தி செய்யும், அந்த ஜனரேட்டர் பழுதடையும் போதும், அவசர காலங்களிலும் இரண்டாவது ஜெனரேட்டர் இயங்கும். இதனால் ரயில்வே துறைக்கும் ஆண்டுக்கு 800 கோடி மின்கட்டணம் மிச்சப்படும். இது ‘ஹெட் ஆன் ஜெனரேட்டர்’ சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த இரு ஜனரேட்டர்கள் தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கு என்றே நவீனமாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டியில், சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்கு உதவும் வகையில் 31 கூடுதல் இருக்கைகளும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் இந்தப் புதிய திட்டங்கள் ரயில்வே பயணிகளின் ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.