இந்திய ஆண்களை பாதுகாக்கவே வழக்கு தொடுத்தேன் என்று சட்டப்பிரிவு 497 ஐ நீக்க காரணமான ஜோசப் ஷைன் கூறியுள்ளார்.
திருமணமான ஒரு ஆண், திருமணமான இன்னொரு பெண்ணுடன், அவரது கணவரின் சம்மதம் இன்றியோ அல்லது ஒத்துழைப்புடனோ செக்ஸ் உறவு வைத்துக்கொள்கிறபோது,தகாத உறவில் ஈடுபடுகிற ஆணுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டு சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்க முடியும். ஆனால் பெண்ணுக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படுவதில்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497 இதற்கு வகை செய்துள்ளது.
இதை எதிர்த்து தான் இத்தாலி நாட்டில் வசிக்கும் இந்தியர் ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,சட்டப்பிரிவு 497 ஐ ரத்து செய்து உத்தரவிட்டது.
தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறி விட்டதால் அது குறித்து பலவாறு விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கை தாக்கல் செய்த ஜோசப் சஹின் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“திருமணத்தை தாண்டிய உறவில் பாதிப்பை எதிர்கொள்வதில் இந்திய ஆண்களை பாதுகாக்கவே விரும்பினேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
உடன் பணியாற்றிய பெண் கொடுத்த போலியான பாலியல் பலாத்கார வழக்கு காரணமாக, தன்னுடைய நண்பர் தற்கொலை செய்துகொண்டதால் தான் இவ்வழக்கை தொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.