ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு – தொடங்கியது மருந்துக்கடைகள் போராட்டம்

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவு முதல் மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைனில் எல்லா விதமான பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், உயிர்காக்கும் மருந்துகள், மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை மாறி, தற்போது ஆன்லைனிலும் மருந்துகள் வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், ஆன்லைன் மருந்து விற்பனை, மருந்து கடைக்காரர்களை கடுமையாகப் பாதிக்கும் என்று மத்திய அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்து, அந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் மருந்து விற்பனையைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இதனால், 24 மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட மருந்துக்கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நள்ளிரவு 12 மணி முதல், இன்று நள்ளிரவு 12 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுகின்றன. இந்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழக அரசின் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில், மருந்துக் கடை போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில், முதலமைச்சர் நாராயணசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், போராட்டத்தைக் கைவிடுவதாக புதுச்சேரி மருந்துக் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version