அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆதார் சட்டம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நீதிபதிகள் இன்று இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில், எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் ஆதார் விவரங்களை கேட்கக்கூடாது என்றும், தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை என்றும், வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கும், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும்,மொபைல் போன் நிறுவனங்களும் ஆதார் கேட்கக் கூடாது, அரசு மானியம், உதவி பெற தகுதி இருந்தால், ஆதார் எண் இல்லை எனக் கூறி அதனை தடுக்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்றும், பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் எனவும், தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.