அ.இ.அ.தி.மு.க.வுக்கு வரும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்..! துணை முதலமைச்சர் தகவல்..!

தினகரனுடன் இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.இ.அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அமைச்சர்கள் தங்கமணியையும், வேலுமணியையும் சந்தித்து நாங்கள் மீண்டும் கட்சியில் சேர விரும்புகிறோம் என்று பேசியிருப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தினகரனை சந்தித்து பேசியதாக அவரது கட்சியினர் வெளியிட்ட தகவலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றபோது அங்கு மிகப்பெரிய எழுச்சியை தொண்டர்கள் மத்தியில் காண முடிந்தது. அங்கு நானும், முதலமைச்சர் எடப்பாடியாரும் பேசியது தினகரனுக்கு விரக்தியையும், பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் நடத்திய தில்லுமுல்லுகளை போன்று திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியில், வேதனையில் பொய்யான கருத்துகளை சொல்லியிருக்கிறார்.

பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து சகோதரர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசை கவிழ்த்து விட்டு நான் முதலமைச்சர் ஆக திட்டமிட்டிருப்பதாக தினகரன் உளறி கொட்டியிருக்கிறார். இதுபோன்று அவர் தொடர்ந்து எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சேற்றை வாரி வீசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். தலைமைக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக செயல்படுபவன்.

நான் தர்மயுத்தம் தொடங்கியதே கட்சியிலும், ஆட்சியிலும் அந்த குடும்பம் நுழையக்கூடாது என்ற எண்ணத்தில் தான். அப்போது தினகரனும், சகோதரர் எடப்பாடி கே.பழனிசாமியும் ஒன்றாக இருந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினகரன் வெளியேறி விட்டார்.

தான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டம் போட்டு 44 எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறியதோடு தொலைக்காட்சிகளிலும் செய்திகளை வெளியிட வைத்தார். நான் இதை பார்த்தபோது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அவருக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் கட்டிக்காத்த பேரியக்கம் சிதைந்து விடக்கூடாதே என்றும், கட்சியில் பிளவு ஏற்பட்டு விடக்கூடாதே என்ற ஆதங்கத்திலும் எதிர்க்கட்சிகளுக்கு இது சாதகமாகி விடுமே என்ற மன வேதனையிலும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடிவு செய்தேன்.

தன்னிடம் 44 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறிய தினகரன் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலையில் ஈடுபட்டார். அப்பொழுது தான் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கமும் என்னிடம் வந்து ஆட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டார்கள். என்னால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆட்சியை காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்தேன்.

நீங்கள் மீண்டும் தங்களோடு இணைய வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் மீண்டும் இணைகிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன். 44 எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக சொன்ன தினகரனுக்கு சரிவு ஏற்பட்டு 18 எம்.எல்.ஏ.க்கள் தான் உடனிருந்தார்கள். இந்நிலையில் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் மீண்டும் ஒன்று சேர்வோம் என்று அமைச்சர்கள் தங்கமணியிடமும், வேலுமணியிடமும் தெரிவித்தேன்.

நான் 3 முறை முதலமைச்சராக இருந்துவிட்டேன். சகோதரர்எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து முதல்வராக இருக்கட்டும். என்னுடன் இருக்கும் பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுங்கள் என்று தெரிவித்தேன். அப்போது அவர்கள் இருவரும் நீங்கள் துணை முதலமைச்சர் பதவியையாவது ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். அதை நான் ஏற்றுக் கொண்டேன். கட்சியை காப்பாற்றுவது என்னுடைய முக்கிய லட்சியமாக இருந்தது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் ஒன்றாக இணைந்தது ஒருங்கிணைப்பாளர்கள் என்ற அடிப்படையில் நான் ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழிநடத்த முடிவு செய்தோம்.

தினகரன் தனியாக சென்று இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், ஒரு வாரத்தில்க விழும், ஒரு மாதத்தில் கவிழும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த சமயம் அந்த நேரத்தில் எனக்கும், தினகரனுக்கும் மிக நெருங்கிய நண்பரான ஒருவர் என்னிடம் வந்து தினகரன் உங்களை சந்திக்க விரும்புகிறார். அவர் மனம் திருந்தி விட்டார். அரசியலில் இருந்தே விலகிக் கொள்வதாக சொல்கிறார். நீங்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று அழைத்தார். நானும் அதை நம்பி தினகரன் திருந்தி விட்டார் என்ற நம்பிக்கையில் அவரை பார்க்க சென்றேன். இது நடந்தது நான் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தபோது. அதாவது, நானும் சகோதரர் எடப்பாடியாரும் இணைவதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி சந்தித்தேன். அப்பொழுதும் தினகரனுடைய போக்கில் மாற்றம் காணப்படவில்லை. அவர் இந்த ஆட்சியை கலைத்து விட்டு தன்னை முதல்வராக்க வேண்டும் என்று கேட்டார்.

நான் அதற்கு மறுத்துவிட்டு வந்து விட்டேன். அதன் பின்னர் அவரை சந்திக்க அழைத்த நண்பர் என்னிடம் வந்து என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கக்கூடாது. ஆனால் தினகரன் திருந்தி விட்டதாக என்னிடம் கூறியதால் இதற்கு சம்மதித்தேன். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று வருத்தம் தெரிவித்தார். நான் சத்தியமாக சொல்கிறேன். உண்மைக்கு மாறாக எந்த தகவலையும் சொல்லவில்லை. நான் பொய் சொல்ல மாட்டேன்.

இதை நான் அப்பொழுதே ஏன் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது கட்சியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். எங்களுக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்ற ஒரு கொடியவரின் கூடாரம் சதி செய்வதால் இதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த அரசு அம்மாவினுடைய அரசு. நான் 3 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். 2 முறை அம்மாவே என்னை முதலமைச்சர் ஆக்கினார்கள்.

அம்மாவிடம் நான் விசுவாசமாக இருந்ததால் தான் முதலமைச்சர் ஆக்கினார்கள். இந்த அரசும், கட்சியும் அம்மாவால் உருவாக்கப்பட்டது. இந்த அரசை கவிழ்க்கும் ஈனத்தனமான எண்ணம் எனக்கு இல்லை. இது தொண்டர்களின் அரசு. இந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக முடியும். ஆனால் தினகரன் எந்த காலத்திலும் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முடியாது. தொண்டர்கள் ஒருபோதும் விட மாட்டார்கள். மக்களும் ஆதரவு ெகாடுக்க மாட்டார்கள்.

அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு தர்ம சங்கடமான நிலைமையை ஏற்படுத்த தினகரன் முயற்சிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நாங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். எனக்கு எந்த காலத்திலும் குறுக்கு வழியில் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இல்லை. தினகரனுக்கு தான் எப்படியாவது முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணமும், பேராசையும் இருக்கிறது. அது ஒருபோதும் நடக்கப்போவது இல்லை. அந்த விரக்தியில் தான் அவர் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்கிறார்.

அவருடன் இருக்கின்ற எம்.எல்.ஏ.க்கள் கூட மீண்டும் அ.இ.அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட அமைச்சர்கள் தங்கமணியையும், வேலுமணியையும் சந்தித்து நாங்கள் மீண்டும் கட்சியில் சேர விரும்புகிறோம் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் தினகரன் வேண்டுமென்றே தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்கத்துடன் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

அம்மா அவர்களிடம் அவர் தான் என்னை அறிமுகம் செய்ததாக ஒரு அண்டப் புளுகு சொல்லி வருகிறார். தினகரன் கட்சியில் சேர்ந்ததே 1999-ல் தான். ஆனால் 1998-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற கழக மாநாட்டின் போதே நான் நகர செயலாளராகவும், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். அப்போது அம்மாவை நேரில் சந்தித்து நிதி கொடுத்த படமும் இதோ இருக்கிறது. (அந்த படத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார்).

இந்த நிலையில் அம்மாவிடம் என்னை அறிமுகப்படுத்தியதாக தினகரன் சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பது இப்பொழுதாவது தெரிந்திருக்கும்.

அரசியல் நாகரிகம் தெரியாத அநாகரிகத்துக்கு சொந்தமானவர் தான் தினகரன். அப்படிப்பட்ட அவர் கட்சியிலும், ஆட்சியிலும் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். அவருடைய பொய்யும்,குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணம் தொண்டர்களிடம் ஒருபோதும் எடுபடாது. மக்களும் ஆதரவளிக்க மாட்டார்கள்.”

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Exit mobile version