அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க கோரும் விவகாரம்: உயர்நீதிமன்றம் விளக்கம்

அரசு பயன்பாட்டிற்கு நிலம் ஒதுக்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க கோருவது, அரசியல் சாசன உரிமை அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசின் திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் 1978ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பாணையில், அரசுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து அப்துல் காதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த முறை நடத்தப்பட்ட ஆசிரியர்கள் தேர்வில், இந்த இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இடஒதுக்கீடு வழங்கும்படி அரசை நிர்பந்திக்க முடியாது என்றும் நிலம் வழங்கியவர்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது, அரசியல் சாசன உரிமையும் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும்,  இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் தான் முடிவு செய்து கொள்ளலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version