அரசுப்பள்ளி மாணவியர், தற்காப்பை வளர்த்துக்கொள்ளும் விதமாக, அவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு, மூன்று மாதங்களுக்கு கராத்தே, ஜுடோ, டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.
ஒரு பள்ளியில் 100 மாணவிகளுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம், மூன்று மாதங்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக, தமிழகத்தில் 5 ஆயிரத்து 711 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 356 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாணவிகளுக்கு, தன்னம்பிக்கை, உடல் வலிமை மற்றும் எந்த ஒரு சூழலிலும் தங்களை தற்காத்துக் கொள்ளும் திறனை வளர்ப்பதற்காக இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.