அரசியலில் பெண்களுக்கு இடம் கொடுக்க சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை என கனிமொழி எம்.பி பேசியிருப்பது, திமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கும், கருணாநிதியின் மற்றொரு மகனான அழகிரிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, கட்சியில் தனக்கு முக்கியமான பதவி வேண்டும் என வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. ஆனால் பொருளாளர் பதவி துரைமுருகனுக்கும், முதன்மை செயலாளர் பதவி டி.ஆர். பாலுவுக்கும் வழங்கப்பட்டது. இதனால், கனிமொழி பழைய பதவியிலேயே இன்னமும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம், முதலமைச்சாராகும் எண்னம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அந்தப் பதவி மீது தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிய அவர், அரசியலில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டினார். திமுகவில் பெண்களுக்கு பதவி வழங்க வலியுறுத்த இருப்பதாக குறிப்பிட்ட கனிமொழி, ஒருசில ஆண்கள் பெண்களுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை என்றார். கனிமொழியின் இந்த கருத்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினுக்கும் தனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை கனிமொழி இவ்வாறு வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.