சி.சி.டி.வி. கேமராக்களின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘மூன்றாம் கண்’ எனும் குறும்படத்தின் குறுந்தகடு சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட, அதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்ற நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து குறும்படம் திரையிடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் சாரங்கன், உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், குற்றங்களை கண்டறிய சி.சி.டி.வி கேமராக்கள் மிக அவசியமான ஒன்று எனவும், அனைவரும் இதை தங்களது வீடுகளில் பொருத்துவதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிய காவல்துறைக்கு பேருதவியாக அமையும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சி.சி.டி.வி. கேமரா பொருத்துவதை செலவென கருதாமல், அதை மூலதனமாக எண்ண வேண்டும் என தெரிவித்தார்.
குற்றங்களை கண்டறிய, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவேண்டியது அவசியம் என அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.