லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 6வது நாளாக நீடிப்பு

கடந்த 20ஆம் தேதி முதல் தொடரும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. காய்கறிகளை கொண்டு செல்ல இயலாததால் 300 டன் அளவிலான காய்கறிகள் தேக்கமடைந்துவிட்டதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அட்டைப்பெட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு பிற மாநிலங்களிலிருந்து வர வேண்டிய காகிதங்கள் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதுடன், ஏற்கனவே உற்பத்தியான அட்டைப் பெட்டிகளும் வெளியே செல்லாமல் தேக்கமடைந்துள்ளன.  லாரிகள் வேலைநிறுத்தத்தால், ஈரோட்டில் ஆயிரம் டன் அளவுக்கு ஜவுளி மற்றும் மஞ்சள் தேக்கமடைந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மூவாயிரத்துக்கும் அதிகமான லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. குபேர சந்தையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் 120 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இந்தநிலையில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் 6வது நாளாக நீடிப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வர்த்தகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version