பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும், மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் முடிவடைந்த போதிலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. ஆனால், சில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், அதேசமயம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தெற்கு அரபிக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தென் அந்தமான் பகுதியில் பருவமழை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், ஓரிரு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version