நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு – 18 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!

 ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் பண்ணை வீட்டில் இருந்து கடந்த 30.07.2000 அன்று ராஜ்குமார் கடத்தப்பட்டார். சந்தன கடத்தல் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் ராஜ்குமாரை கடத்தி சென்றனர். இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.

தூதுவர்கள் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 108 நாட்களுக்கு பிறகு நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தார். வீரப்பன், அவருடைய கூட்டாளிகள் 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரமேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார்.

ராஜ்குமார் கடத்தல் வழக்கு மீதான விசாரணை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மணி, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு உரிய முறையில் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். 18 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்குமார் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ராஜ்குமார், அவரது மனைவி பர்வதம்மாள் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version