ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை – அப்போலோ நிர்வாகம்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக கடந்த 11 ஆம் தேதி அப்பல்லோ தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் 45 நாட்கள் மட்டுமே வீடியே பதிவுகளை சேமிக்க முடியும் என்றும், புதியதாக பதிவுகள் சேரும் பொழுது பழைய பதிவுகள் தானாக அழிந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது பதிவான வீடியோ பதிவுகள் தற்போது இல்லை எனவும், அதனை தாக்கல் செய்ய இயலாது எனவும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே மீண்டும் 25 ஆம் தேதி ஆஜராகுமாறு அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version