சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் – முதலமைச்சர் அறிவிப்பு

 

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எஃகு கோட்டை என்று உறுதிபடக் கூறியுள்ளார். சென்னை அருகே உலகத் தரத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்த அவர், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், பேருரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

எம்ஜிஆரின் சிறப்பியல்புகளை நினைவு கூர்ந்த அவர், ஜெயலலிதாவின் விருப்பப்படி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்கி 31 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி கன்னியாகுமரியில் நிறைவு செய்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50வது ஆண்டு பொன்விழாவை ஒன்றாக நடத்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த முதலமைச்சர், எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை போன்று, 380 ஆண்டுகால வரலாறு மற்றும் வளர்ச்சியை கொண்டது சென்னை என்று பாராட்டினார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டை ஜெயலலிதா சிறப்பாக நடத்தியதை நினைவு கூர்ந்த அவர், இதன் மூலம் தமிழகத்தில் தொழில்வளம் பெருகியதாக கூறினார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்து இருப்பதை சுட்டிக் காட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருப்பதையும் குறிப்பிட்டார்.

மக்கள் நாயகனாக திகழ்ந்த எம்ஜிஆர் செயல்படுத்திய நலத் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், எம்ஜிஆர் பெயரில் சிறப்பு தபால் தலை, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டு இருப்பதை எடுத்துரைத்தார்.

அசைக்க முடியாத எஃகு கோட்டை அதிமுக என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், தொண்டர்களின் தியாகம், உழைப்பே அதிமுகவின் உரம் என்றார்.

எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுக இருக்காது என்று நினைத்தவர்களின் கனவை தகர்த்தவர் ஜெயலலிதா என்று உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்த அவர், அதிமுக அரசின் நலத் திட்டங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.

சென்னை நகரின் மேம்பாட்டிற்காக ஜெயலலிதா சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதையும், அதை அவரது வழியில் செயல்படும் அதிமுக அரசு தொடர்ந்து கடைபிடித்து வருவதையும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அதிமுக மக்களுக்காக உருவான கட்சி என்று பெருமையுடன் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்றார்.

ஊருக்கு தம்பட்டம் அடிக்க விழா நடத்தும் கட்சி அதிமுக கிடையாது என்று தெரிவித்த அவர், மக்களுக்காகவே பாடுபடும் கட்சி அதிமுக என்று கூறினார்.

அவதூறு பரப்புவதையே கொள்கையாக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடம் வகித்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

நல்லாட்சியால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதனால் விரக்தியின் விளிம்பில் ஸ்டாலின் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

கட்சியை உடைக்க நினைத்த சில புல்லுருவிகளின் முயற்சி பலிக்கவில்லை என்றும், அரசை கவிழ்க்க நினைத்தவர்களின் சதி முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருபெரும் தலைவர்களின் கொள்கைகளால் வழி நடத்தப்படும் ஆட்சி தமிழகத்தில் என்றென்றும் தொடரும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய திட்டங்களை அறிவித்த அவர், சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றார்.

சென்னை மவுண்ட் – பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பள்ளிக்கரணையில் 100 படுக்கைகள் கொண்ட, புறநகர் மருத்துவமனை 31 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Exit mobile version