எம்.ஜி.ஆர். முதல் நாடகம், முதல்படம், முதல் வேடம்… 

தமிழ்நாட்டின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின் இளமை பருவம் மலர்படுக்கையாக இல்லாமல் முற்படுக்கையாக இருந்தது. இப்படி பல தலைமுறைகளையும் தாண்டி தமிழக வரலாற்று ஏட்டில் பொன் எழுத்துக்களாய் இருக்கும் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் இளமை பருவம் அத்தனை இனிமையானதாக இல்லை. சோதனைகளை சாதனைகளாக மாற்றிய மக்கள் திலகத்தின் இளமை பருவத்தின் கதையை அறிந்து கொள்வோம்.

மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் இலங்கையில் கண்டிக்கு அருகே உள்ள நாவல் பிண்டியில் மருதூர் கோபால மேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பின்னர் கேரளாவிற்கு இடம் பெயர்ந்தது. தந்தையின் மறைவிற்கு பிறகு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் சத்யபாமா கும்பகோணத்தில் குடியேறினார். வறுமை மட்டுமே குடும்ப சொத்தாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரை பசியின் கொடுமை ஆட்கொண்டது.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக எட்டு வயதிலேயே படிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி மூலமாக நாடக உலகில் கால்பதித்தார் இளம் வயது எம்.ஜி.ஆர்.

நாடகக்குழுவில் சேர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர், அக்கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்துப் புகழ் பெற்றார்.

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சினிமாவை நோக்கி சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னையில் நடிப்பில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் அங்கும் வறுமை மட்டுமே எம்.ஜி.ஆரின் உற்ற தோழனாய் இருந்தது.

நாடகத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி மூலமாக சிறிய வேடத்தில் அறிமுகமானார். அதன்பின் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் போராட்டம் தான்.

1947 ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் ராஜகுமாரி திரைப்படம் தான் எம்.ஜி.ஆரின் முதல் வெற்றித் திரைப்படம்.

அன்று துவங்கி தன் அந்திம காலம் வரை அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றிப் படங்கள் தான். அதிலும் அவர் இயக்கிய  படங்கள் இன்றளவும் ரசிகர்களை ஈர்ப்பவை.

தாய்பாசம் , நேர்மை , பிறருக்கு உதவுவது இவையே எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் தாரக மந்திரம். சொந்த வாழ்விலும் இதுவே அவரது வாழ்க்கைத் தத்துவம்.

 

 

Exit mobile version