இந்திய அளவில் 6 விருதுகள் – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சாதனை

இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மத்திய அரசின் 6 விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தொழிலாளர்களுக்கு குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்குதல் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஊதியத்திற்கு இழப்பீடு வழங்குதல் குறித்த செயல்பாட்டிற்கு முதலிடம் பெற்றுள்ளது. அரசின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்களுக்கு புவிக்குறியீடு செய்வதில் சிறப்பு முயற்சிகளுக்காகவும் முதலிடம் கிடைத்துள்ளது.

தொழிலாளர்களின் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைத்து ஊதியம் செலுத்துவதில் சிறந்த செயல்பாட்டிற்கு இரண்டாமிடத்திற்கான விருதை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பெற்றுள்ளது. 2016, 2017ல் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சிறந்த மாவட்ட விருதுகள் கிடைத்துள்ளன.

அதேபோல், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ் 7 முக்கிய திட்டங்களில் தன்னிறைவு பெற்றதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு விருது என மொத்தம் 6 விருதுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பெற்றுக்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து, மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

Exit mobile version