இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை – அமெரிக்கா வரவேற்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.

குறிப்பாக பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உதாரணங்கள் ஆகும். இந்த சம்பவங்களால் இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. மேலும், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததும், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களும் பேச்சுவார்த்தைக்கான சூழலை முடக்கி உள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுதி உள்ள கடிதத்தில், இரு நாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரி இருந்தார். பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.

இதன்படி, நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நயூர்ட், இருநாடுகளிடையே மீண்டும் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையால் ஆசிய கண்டத்தில் அமைதி திரும்பும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version