இசை உலகத்தை ஆளும் "யுவன் சங்கர் ராஜா''-பிறந்தநாள் ஸ்பெஷல்

டிவியோ,ரேடியோவோ,மொபைல்போனோ இன்றும் பலரின் பிளே லிஸ்ட் பாடல்களில் யுவன் பாடல்கள் இல்லாமல் அன்றைய பொழுது கடந்திருக்க வாய்ப்பில்லை.

நல்ல திரைப்படம் என்பது கதைக்களம், காட்சியமைப்புகளைத் தாண்டி அதன் பின்னணியில் அதன் உயிர்நாடியாய் ஒலிக்கும் இசையை பொறுத்தது என்ற உண்மை என்றைக்கும் மறுப்பதற்கில்லை. அப்படியான பின்னணி இசையில் தன் அப்பா இளையராஜாவிற்கும் மேலாக இசையுலகில் தனி ராஜாங்கமே நடத்தி கொண்டிருப்பவர் ‘யுவன் சங்கர் ராஜா’.1997ல் தனது 16வது வயதில் அறிமுகமான யுவனுக்கு இந்தியாவிலேயே இளம் வயதில் அறிமுகமான இசையமைப்பாளர் என்ற பெருமை உண்டு. ”அரவிந்தன்” திரைப்படத்தில் தொடங்கிய அவரது இசைப்பயணத்தை “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் அனைவரும் ரசிக்க தொடங்கினர்.

இன்றைக்கு படத்தின் டைட்டில் போடுகின்ற வேளையில் யுவனின் பெயர் வரும் போது பெரும்பாலானோர் தங்களின் ஆரவாரத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றால் யுவன் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

யுவன் ஒரு நேரத்தில் செம பிசியாக இருந்த நேரம். வரிசையாக அவரது இசையில் வெளியான படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகின. படங்களுக்கு இசையமைக்கும் விஷயத்தில் அவரது அப்பா இளையராஜாவைப் போல… அவரால் ஒரே நேரத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசை கொடுக்க முடியும். அறிமுகமே இல்லாத ஹீரோக்கள் படங்களுக்கும் இசை அமைக்க முடியும்.

யுவனின் இசை பயணத்தில் இயக்குனர்கள் ராம், அமீர்,சுசீந்திரன், விஷ்ணுவர்தன், வசந்த், வெங்கட் பிரபு,லிங்குசாமி ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள். காரணம் பெரும்பாலும் யுவனின் இசை இல்லாமல் இவர்களது படங்கள் இருக்காது. அதிலும் பின்னணி இசையில் தற்காலத்தில் தமிழ் திரையுலகத்தில் யுவனை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவரது ஒவ்வொரு படத்திற்கும் தீம் மியூசிக்கில் இருந்து பின்னணி இசை வரை வெரைட்டியாக கொடுத்து படம் பார்ப்பவர்களை அப்படியே பிரம்மிக்க வைத்திருப்பார். யுவனால் ஒரே சமயத்தில் ‘பில்லா’ போன்ற படங்களுக்கு மேற்கத்திய ஸ்டைலிலும், பருத்திவீரன் போன்ற கிராமத்து கதைகளுக்கும் நாட்டார் வழக்காற்றியல் இசையையும் கொடுக்க முடியும்.

பின்னணி இசையை எடுத்துக்கொண்டால் புதுப்பேட்டை,மங்காத்தா,பில்லா,பருத்திவீரன்,ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் யுவனை பற்றி உலகளவில் பேச வைத்தன. குறிப்பாக “கற்றது தமிழ்” படத்தை எடுத்துக்கொண்டால் அதன் பின்னணி இசை காண்போர் மனதிற்குள் ஏதோ மாயாஜாலம் செய்யும். அங்குதான் ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் வெற்றி காண்கிறார் யுவன்.

தீம் மியூசிக்கை எடுத்துக்கொண்டால் முதல் இடத்தில் இருப்பது ‘பில்லா’ படத்தின் தீம் மியூசிக் தான்.அதன்பிறகு மங்காத்தா,புதுப்பேட்டை படங்களின் தீம் மியூசிக் இடம் பிடிக்கும்.

யுவனின் மெலடி பாடல்களை எடுத்துக் கொண்டால் எவற்றிற்கு எந்த இடம் கொடுப்பது என்பது நாம் குழம்பிப் போகும் அளவிற்கு கணக்கில் இல்லாதது. ‘பையா’ படத்தில் இடம்பெற்ற ‘துளி..துளி மழையாய்’ பாடல் அந்த ஆண்டின் சிறந்த டாப் 20 பாடல்கள் லிஸ்டில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களை தாண்டி யுவன்- செல்வராகவன் கூட்டணி என்பது தனித்துவம் வாய்ந்தது. துள்ளுவதோ இளமையில் தொடங்கி கடைசியாக வந்த என் ஜி கே வரை ஒவ்வொன்றும் ரக ரக மாக கொண்டாடப்பட்டது.
மற்ற பாடலாசிரியர்களை விட நா.முத்துக்குமார்-யுவன் கூட்டணியில் வெளியான பாடல்களுக்கு மட்டும் ரசிகர் கூட்டமே உண்டு.

எப்படி யுவனின் இசை தனித்து தெரிகிறதோ அதேபோல யுவனின் குரலும் ஒரு முறை இந்த பாடலை கேட்டால் அனைவருக்கும் எளிதில் பரீட்சையமாகி விடும். கண்டிப்பாக யுவன் இசையமைக்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் ஒரு பாடி விடுவார். படத்தின் பாடல்கள் வெளியாகும் நேரத்தில் முதலில் ரசிகர்கள் தேடுவது அவரின் குரலில் வெளியாகும் பாடலை தான்.

யுவன் தன் இசை மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் உடன் ‘மரியான்’ படத்திலும், ஜிவி பிரகாஷ் குமாருடன் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திலும், குறளரசனுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும், தன் அப்பா இளையராஜா இசையில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திலும் பாடல்களை பாடியுள்ளார்.

யுவனின் 100வது படமாக பிரியாணி படம் வெளியானது. படத்தில் இடம்பெற்ற “எதிர்த்து நில்” பாடலில் நான்கு இசையமைப்பாளர்களை பாடவைத்து ஆச்சரியப்படுத்தி இருப்பார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ ரீமிக்ஸ் பாடல்கள் வந்தாலும் அதிகாரபூர்வமாக முதன்முதலில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட ஆசை நூறு வகை பாடலுக்கு இசை அமைத்ததும் யுவன் தான்.

தமிழ் சினிமாவில் அம்மாவிற்கு “ஆராரிராரோ”, அப்பாவிற்கு ” தெய்வங்கள் எல்லாம்”, மகளுக்கு “ஆனந்த யாழை”, காதலின் பிரிவுக்கு ” ஒரு கல்..ஒரு கண்ணாடி “, காதலின் துரோகத்துக்கு ” என் நண்பனே”, என அனைத்து விதமான பாடல்களையும் கொடுத்த இசையமைப்பாளர் யுவன் மட்டும் தான்.அதனால் தான் அவர் கொண்டாடப்படுகிறார்.

“பியார் பிரேம காதல்”, ” கொலையுதிர் காலம்” படங்களை தயாரித்தும் உள்ளார் யுவன்.

2004ம் ஆண்டில் ‘7ஜி ரெயின்போ காலனி” படத்திற்கு பிலிம்பேர் விருதையும், 2006ம் ஆண்டில் ‘பருத்திவீரன்’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றுள்ளார்.

22 வருட #Yuvanism வாழ்க்கையில் எதிர்பார்த்த விருதுகள் கிடைக்கவில்லையென்றாலும் ரசிகனால் என்றுமே அங்கீகரிக்கப்படும் மாபெரும் கலைஞன் “யுவன்”.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் U1…..

Exit mobile version