சென்னை, மதுரவாயலில் காதலித்த பெண் ஏமாற்றியதால், காதலிக்கு செலவு செய்த பணத்தை மீட்டுத் தருமாறு, தேவதையை கண்டேன் திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் நாயகி ஸ்ரீதேவி தனுசை காதலிப்பார் அவர் டீ விற்கும் நபர் என்று தெரிந்தவுடன் காதலை ஏற்க மறுத்து விடுவார். இதனால் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார். படத்தில் வந்த இந்த காட்சி போல் தற்போது மதுரவாயலிலும் ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது.
மதுரவாயல், மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்கி என்ற கீரிப்புள்ள வயது 21, மெக்கானிக்கான இவர் நேற்று இரவு மதுரவாயல் காவல்நிலையத்திற்கு போதையில் வந்தார். வந்தவர் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண் இதுவரை தன்னை காதலித்து விட்டு தற்போது காதலிக்கவில்லை என்று கூறி தனது காதலை ஏற்க மறுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாம்பழத்தை அறுப்பது போல் சரசரவென கையை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அதன்பிறகு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே நின்று தற்கொலை முயற்சியிலும் ஈடுபட முயன்றார். இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அந்த நபரை அழைத்து வந்து சமாதானம் பேசினார் மேலும் தான் காதலித்த பெண் தன்னை காதலித்த போது அவளுக்கு ரூபாய் 3 ஆயிரம் செலவு செய்ததாகும் அந்த தொகையை வாங்கி தர வேண்டும், அதுமட்டுமல்லாமல் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த நபர் போதையில் இருப்பதால் போதை தெளிந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று காவல்துறையினர் அந்த இளைஞரை சமாதானம் செய்தனர். காதலிக்கும் போது காதலிக்கு செலவு செய்த பணத்தை திரும்ப வாங்கி தருமாறு போலீஸ் நிலையம் முன்பு தகராறு செய்த காதலனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post