சென்னையில் “ப்ரீ பைர்” (fire free) எனும் ஆன்லைன் விளையாட்டு மூலம் அறிமுகமான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
முழு ஊரடங்கிலும் இருசக்கர வாகனத்திலே சென்னை – கடலூர் வரை சிறுமியை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது..
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 27-ம் தேதி வீட்டில் அறையில் பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்தவர் காலையில் காணாமல் போனதால் பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமி இளைஞர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து நொளம்பூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.
செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியில் இருவரும் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இரு சக்கர வாகன எண்ணை அனுப்பி கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், குமராட்சி சோதனைச்சாவடியில் சிறுமியை மீட்டு அழைத்து வந்த இளைஞரையும் பிடித்தனர். பின்னர், சென்னை போலீசார் நேரில் சென்று அழைத்து வந்தனர்.
சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் சதீஷ் அவரது காதலன். மதுரை அலங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ் காஞ்சிபுரத்தில் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். ப்ரீ பைர் எனும் ஆன்லைன் விளையாட்டில் தான் இருவரும் சந்தித்து பழகியுள்ளனர். வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு குழுவாக சேர்ந்து விளையாடும் ப்ரீ பைர் விளையாட்டில் ஊரடங்கு நாளில் சேர்ந்து விளையாடி வந்ததில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சிறுமி 12-ம் வகுப்பு படிப்பதால் ஆன்லைன் வகுப்பு எனக் கூறி காதலன் சதீஷுடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேரில் பார்க்க வேண்டும் என கூறி இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சதீஷ் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவ காரணங்கள் என போலியான தகவலை கூறி இ – பாஸ் எடுத்து கொண்டு சிறுமியை அழைத்து சென்றதும், பாலியல் ரீதியாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் என்ற இளைஞர் மீது திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஊரடங்கு நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்கும் பொழுது வாலிபர் ஒருவர் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து சென்னையில் இருந்து கடலூர் வரை சிறுமியோடு சென்ற சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..
மேலும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுப்படும் தங்களது பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் எச்சரிக்கின்றனர்..
Discussion about this post