ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் காலியாக உள்ள 896 சிவில் சர்வீஸ் இடங்களுக்கான முதல்நிலை தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாட்டில் 72 மையங்களில் காலை பொது அறிவு தேர்வும், மதியம் திறனறிவு தேர்வும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கட்-ஆஃப் அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெறுவர். இதனிடையே சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேர்வாணையம் சார்பில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு புதுச்சேரியில் உள்ள 8 மையங்களில் தொடங்கியது. இத்தேர்வை 3,025 பேர் எழுதுகின்றார்கள். தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வையொட்டி புதுச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 8 மையங்களுக்கும் புதுச்சேரி அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது.