கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிக்காடு என்னும் கிராமத்துக்கு, திருமணமாகி சென்றவர்தான் 22 வயது சிந்து. குடும்பத்தின் பொருளாதார சூழலுக்காக, திருமணமாகி ஒரு வருடத்தில் கணவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். இதயம் நிறைத்த கணவர் திரவியம் தேடி திரைகடல் தாண்டியதும், சிந்துவின் நேரப்போக்கு இணையமாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்தவருக்கு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது சமித்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் மேலாளராகப் பணி செய்வதாக சமித் தெரிவிக்க அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
ஒருகட்டத்தில், தனிமை தவிப்புக்கான தடம் சமித் என்று நினைத்த சிந்து, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் அவரைத் தேடி வேடசந்தூர் வந்துள்ளார். இதனால் சிந்துவை காணவில்லை என்று, வெளிநாட்டில் இருந்த கணவர் மெலட்டூர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிந்து வீட்டில் சோதனை மேற்கொண்டவர்கள், அவரது சமூக வலைதள பக்கங்களில் இருந்த தகவல்கள் மூலமும், அவரது செல்போன் சிக்னல் மூலமும், வேடசந்தூர் வந்துள்ளனர். அவர்களோடு இணைந்து வேடசந்தூர் போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தியதில், சிந்து கிடைத்துவிட அவரிடம் விசாரித்துள்ளனர்.
சமீத் மீதான காதலால் வேடசந்தூர் வந்த சிந்து, அங்குள்ள நூற்பாலையில் விசாரித்தபோது, அப்படி ஒருவர் இல்லை என்று தகவல் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் சமீத்தை கண்டுபிடிக்கும் முயற்சியுடன், அதே வேடசந்தூரில் இணையம் மூலம் பழக்கமான ஒரு பெண்ணின் உதவியை நாட, அவரோடு சேர்ந்து அண்ணநகரில், அறையில் தங்கிய சிந்து, நூற்பாலையில் வேலை செய்தபடி, சமீத்தை தேடியுள்ளார்.
மேலும் தோழிகள் மூலம் இணையத்தில் விசாரித்தபோது சமீத்துக்கு திருமணமாகி கேரளாவில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருவதும், அவர் நூற்பாலை மேலாளர் இல்லை கொத்தனார் வேலை செய்து கொண்டு, இன்ஸ்டாகிராமில் பொய் சொல்லி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் கலக்கமடைந்த சிந்து, மீண்டும் ஊருக்குச் செல்ல முடியாத சூழலில், 3 மாதங்களாக இங்கேயே தங்கியிருந்து தவித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் போலீசார் அவரை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவரை கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.
கணவனை மறந்து அடுத்தவனை நினைத்து, வாழ்வில் தடுமாற்றத்தை சந்தித்த சிந்துவின் நிலை இணையமே கதி என்று நெறிதவறி மாற்று சிந்தனைகளை வளர்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாகும்.
Discussion about this post