தமிழ் எழுத்துலகம் மீண்டும் இன்னொரு படைப்பாளனை இழந்திருக்கிறது. புதுவை தந்த புதுக்கவிஞன். புதுப்புது நெறிகளை புத்தியில் பதிக்கும் புதுயுக கலைபிரம்மா. எழுத்தாளராக என்பதை விட இலக்கிய உலகின் நல்ல மனிதன் பிரபஞ்சன் தன் இன்னுடல் நீத்திருக்கிறார். இயற்பெயர் என்னவோ சாரங்கபாணி வைத்தியலிங்கம். இலக்கிய உலகிற்காக பிரபஞ்சன் என்று பெயர் வைத்துக் கொண்டார். புதுச்சேரியை சொந்த ஊராகக் கொண்டவர். 1954 ல் பிறந்து 1961 முதல் 2018 டிசம்பர் 21 வரை இலக்கிய உலகின் இன்றியமையாத பேனாக்காரனாக வலம்வந்தார்.
கவிதை உலகில் யாரும் மறக்கமுடியாத ஆளுமைகள் என்றால் வானம்பாடிக் கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வானம்பாடிக் காலத்தில்தான் தன் பெயரை மாற்றிக்கொண்டார். கவிதைகளில் பெரிதாக கவனம் செலுத்தாத இவர் அதற்குச் சொல்லும் காரணம் வலியது. அதாவது , எந்த மொழியில் கவிதை எழுதுவதானாலும் கவிதை ஒரு தனிமொழி. அந்த மொழி கைவரப்பெற்றால்தான் நாம் எழுதுவது கவிதையாக இருக்கும். அல்லாத பட்சத்தில் கைவிடுவதே நல்லது. நல்லவேளையாக நான் முன்னமே இதை புரிந்துகொண்டேன் என்பார்.
எழுத்தின் மூலமாக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது. சாகித்திய அகாதமி விருது – வானம் வசப்படும் (1995) ,பாரதிய பாஷா பரிஷத் விருது, கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது – மகாநதி , இலக்கியச் சிந்தனை விருது – மானுடம் வெல்லும் , சி. பா. ஆதித்தனார் விருது – சந்தியா , நேற்று மனிதர்கள் -தமிழக அரசின் பரிசு, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு , என படைப்புகள் பரிசுகளுக்குக் குறைவைத்ததே இல்லை.
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்களில் வரும் கிருஷ்ணமூர்த்தியும் ரங்கசாமியும் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை செய்யும் ஒட்டுமொத்த சமூகத்தின் வெட்டவெளிச்சக் குறியீடுகள். வெளிப்படையாக எழுதும் பெண்களை கேவலமாக விமர்சிப்பவர்கள் முதலாம் நம்பர் மூடர்கள் என்பது இவரின் திண்ணமான எண்ணம். நூல்கள் பல படைத்திருப்பது மட்டும் ஒரு எழுத்தாளனை உருவாக்குவதில்லை. அவன், பாரபட்சமின்றி பண்புகளோடு பயணிக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டும் என்கிற கொள்கையில் படுதீவிரமாக வாழ்ந்தவர். நூலோடு நூலாகப் பயணித்தது போலவே இளைஞர்கள் பலருடன் தோளொடு தோளாகவும் பழகிய பாங்குக்காரர்.
வானம் வசப்படும், கண்ணீரால் காப்போம், மானுடம் வெல்லும் என்கிற நாவல்கள் வெறுமனே கதை சொன்னவை அல்ல. அவை பிரெஞ்சு ஆதிக்கப் புதுச்சேரியை உலகுக்கு காட்டிய வரலாற்று இலக்கியங்கள். உலக இலக்கியங்களில் குறிப்பாக ரஷ்ய இலக்கியங்களின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்.
சமூகம் மீதான தன் பார்வையை வெறுமனே எழுத்தில் சொல்வதோடு நில்லாமல் நேரடி களங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றதும் உண்டு. 1964 ம் ஆண்டு இறுதியிலும் 1965 இன் தொடக்கத்திலும் நடந்த காங்கிரஸுக்கு எதிரான இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு 20 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 40 மாணவர்கள் ஒரே அறையில் அடைக்கபட்டிருந்த அந்த அனுபவத்தை எப்போதும் சிலாகிக்கும் இயல்புடையவர். அங்கு தான் நிறையப் படித்ததாகவும், சிறையிலிருந்த நூலகத்தில்தான் காந்திய மார்க்சிய ஒப்பீட்டு சிந்தனைகளுக்கு தான் அறிமுகமானதாகவும் மனம் திறப்பார்.
அவன் நூல்களில் ஒன்றோடேனும் பயணிக்காமல் ஒரு வாசகனின் வாழ்க்கை முடியுமானால் அவன் இலக்கிய உலகின் இன்பத்தை அடையாதவன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தொடர்ந்து தமிழாளுமைகளை இழந்துகொண்டே வருகிறது தமிழ்ச்சமூகம். பிரபஞ்சன் போலொரு ஆளுமையை இழந்ததில் தமிழன்னை மேலும் சோர்ந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. எழுத்துக்களால் இந்த உலகில் எவரும் அழிக்கமுடியாத இடத்தில் அமர்ந்தபிறகே இயற்கையோடு கலந்திருக்கிறார் பிரபஞ்சன். இனி எழுத்தாக எல்லோர் வீட்டு நூலகங்களிலும் வாழ்வார்.