தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கி அளித்துள்ளது. அந்த வட்டாரத்தில் உருளைக்குடி எனும் கிராமத்தில் 1952-ம் ஆண்டு பிறந்தவர் தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட சோ.தர்மன். கரிசல் மண்ணின் கதாநாயகன் கி.ராஜநாராயணன் அடியொற்றி, தமது உறவினர் பூமணியின் தடம்பற்றி 1980-களில் எழுத்துலகில் அடியெடுத்து வைத்தார் சோ.தர்மன்.
ஈரம், வனக்குமாரன், சோகவனம் போன்ற சிறுகதை தொகுதிகள் மூலம் கவனம் ஈர்த்து சோ தர்மன், தனது கூகை நாவல் மூலம் தமிழில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணினார். தமிழ் வளர்ச்சித்துறைக்கான விருதினை பெற்ற அந்த நூல், ஆங்கிலம் – மலையாளம் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூல், தூர்வை போன்ற புதினங்களை படைத்தார் சோ. தர்மன். இதில் 2016-ம் ஆண்டுக்கான சுஜாதா விருதை வென்ற சூல், கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமியையும் பெற்றது. கண்மாய்களின் முக்கியத்துவத்தை கிராமிய பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பை ரத்தமும், சதையுமாக சொன்ன விதத்தில் சூல் தமிழின் மிக முக்கியதொரு படைப்பு.
வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய ஆய்வு நூல் ஒன்றையும் எழுதியுள்ளார் சோ. தர்மன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பின்னரும் தொடர்ச்சியாக எழுத்துப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சோ.தர்மன் அவர்களுக்கு வாசகர்களோடு சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி மகிழ்கிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி https://www.youtube.com/watch?v=meGO5ErjFEg
Discussion about this post