காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் சிவாலயங்களில் லட்சதீபம் ஏற்றப்பட்டது.ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உலக முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம், அந்த வகையில்,கார்த்திகை மாதத்தின், 5வது திங்கட்கிழமை சோமவரம் வழிபாடு நடைபெற்றது. இந்த சோமவரம் வழிபாட்டில், அனைத்து சிவாலயங்களிலும் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் கோவிலின் உள்பிரகாரம், வெளிபிரகாரம் மற்றும் மண்டபங்களில், வண்ணக்கோலங்கள் இட்டு அதன் மீது தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் மற்றும் விநாயகர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோயில் வாசல் முன்பு தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பழமுதிர்சோலையில், முருகன் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு உலக நன்மை வேண்டி ஆயிரத்து 8 சங்குகளை மலர்களால் அலங்கரித்து, ஓம் வடிவில் சங்காபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டும் சங்காபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் அர்ச்சனை செய்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
Discussion about this post