அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒருநாளில் ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் உயிரிழந்த காரணத்தால், பலி எண்ணிக்கை 78 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் ஒரு லட்சத்து 87 ஆயிரம் பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோன்று, பிரேஸில், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று, ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் ஒட்டுமொத்தமாக, 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 லட்சத்து 85 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
Discussion about this post