உலகை உலுக்கிய செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்து 34 ஆண்டுகள் கடந்துவிட்டன. இயற்கை பேரிடர்களை எல்லாம் தாண்டிய இந்த செயற்கை பேரிடர் எப்படி நிகழ்ந்து? கொரோனா… இந்த பெயரை கேட்டால் நம்முள் ஒருவித பயம் கலந்த பதற்றம் எழுகிறது அல்லவா… அப்படி 30 ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதையும் பதற்றத்தில் ஆழ்த்திய மற்றொரு பெயர் செர்னோபில். உக்ரைன் தலைநகர் கிய்வ்(kyiv)-ல் இருந்து 104 கிமீ தொலைவில் அமைந்துள்ளது செர்னோபில் நகரம்… சோவியத் யூனியனுக்கு சொந்தமான அணு உலைகள் இங்கு இயங்கி வந்தன. 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி நள்ளிரவு.. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஒரு மின்வெட்டால் 4-வது அணு உலையில் நீராவி வெடிப்பு நிகழ்ந்தது. சில நிமிடங்களில் அணு உலை மொத்தமாக வெடித்து சிதறி கடுமையாக பற்றி எரிந்தது. தொடர்ந்து 9 நாட்கள் எரிந்துகொண்டிருந்த உலையில் இருந்து 20 வகையான கதீர் வீச்சு பொருட்கள் காற்று மண்டலத்தில் கலந்தன. விபத்து நிகழ்ந்த மறு நாள் சுமார் ஆயிரத்து 500 கிமீ தொலைவில் உள்ள ஸ்வீடன் நாட்டுக்கு சொந்தமான அணு உலையில் கதிரியக்கம் கசிவதாக அபாய மணி ஒலித்தது. விபத்து ஏதேனும் நிகழ்ந்ததா என ஆய்வு செய்த நிபுணர்கள் அதிர்ந்துபோனார்கள். காரணம், அந்த கதீர் வீச்சு அங்கிருந்து வரவில்லை மாறாக 3 நான்கு நாடுகள் தள்ளியிருக்கும் உக்ரைனில் இருந்து வந்ததாகும். உக்ரைன் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றது. இதை அறிந்து ஒட்டு மொத்த உலகமும் ஆடிப்போனது. அணு உலை விபத்து என்பது நாடுகளை கடந்து ஆபத்தை ஏற்படுத்தும். அப்படி செர்னோபில் விபத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்வீடன், பெலாரஸ், பிரான்ஸ், பல்கேரியா, பிரிட்டன், அயர்லாந்து, கிரீஸ் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
விபத்து நிகழ்ந்த சில மணி நேரத்தில் இதன் வீரியத்தை உணர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயன்றது சோவியத் யூனியன். 200 டன் அணுக்கழிவு மற்றும் 30 டன் கதிர் வீச்சு பொருட்களிடம் இருந்து அந்த பகுதியை பாதுகாக்க கான்கிரீட் வேலி அமைக்கப்பட்டு அப்பகுதி மூடப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகள் கழித்து ஜி7 நாடுகளின் தலைவர்கள் சேர்ந்து செர்னோபிலில் மிகப்பெரிய சவப்பெட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தனர். காரணம் ஏற்கெனவே மூடப்பட்ட கான்கிரீட் வேலியில் இருந்து கசிவு ஏற்பட்டு கதிரியக்கம் வெளியேறும் அபாயம் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் சுமார் 350 மீட்டர் உயரத்தில் மிகப்பெரிய பெட்டி போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் விபத்து நிகழ்ந்த அணு உலையையும் அதன் மீது எழுப்பட்ட கான்கிரீட் வேலியிலும் காற்றுகூட புகமுடியாதபடி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இது அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாங்கும் என தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதற்குள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அணுக்கதிர்கள் வெளியேறுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதி மனிதன் வாழ தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. இங்கிருந்து இன்றும் வெளிப்பட்டு வரும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் 20 ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.. காரணம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் அமெரிக்கா வீசிய அணு குண்டை விட செர்னோபில் விபத்து 400 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சுமார் 1 லட்சம் பேர் செர்னோபில் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விஷக்காற்றை சுவாசித்து 4 ஆயிரம் பேர் பலியாகினர். பல லட்சக்கணக்கானோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டன. கதிரியக்க தாக்கத்தால் அடுத்த சில மாதங்களில் 90 ஆயிரம் பேர்வரை உயிரிழந்தனர். பல லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை குலைத்து நடைபிணமாக்கியது இந்த அணு உலை விபத்து. மனித இன வரலாற்றில் மனிதன் ஏற்படுத்திய ஆகப்பெரிய பேரிடரின் சாட்சியாக இன்றும் காட்சியளித்து வருகிறது செர்னோபில்.
Discussion about this post