அஞ்சல்தலைகள் – என்பவை தபால் போக்குவரத்தின் ஒரு அங்கம் என்பதையும் தாண்டி, பல முக்கிய வரலாற்றுத் தகவல்களின் கருவூலமாகவும் திகழக் கூடியவை. அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் வெளியிடப்பட்ட தபால்தலைகளை அதன் உதாரணங்களாகக் கூறலாம்.
அதனால்தான் இந்த நவீன யுகத்திலும்கூட ‘அஞ்சல் தலை சேகரிப்பு’ என்பது ஒரு பரவலான பொழுது போக்காக உள்ளது. தபால்தலை சேகரிப்புக்கு ஆங்கிலத்தில் ‘பிலாடெலிக்ஸ்’ – என்று பெயர். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற அஞ்சல்தலைகள் முதன்முதலாக உலகுக்கு அறிமுகமான நாள் இன்று.
ஒட்டும் தன்மையுள்ள தபால்தலைகளும், ஒருதன்மைத்தான தபால் கட்டணமும், ‘ஜேம்ஸ் சாமேர்ஸ்’ என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் “ காரணங்களை விளக்கி ” சாமேர்ஸ் வாதாடிய பிறகு 1839 ஆகஸ்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த 1840ஆம் ஆண்டின் மே மாதம் 1ஆம் தேதியில்தான் உலகின் முதல் தபால் தலையான ‘பென்னி பிளாக்’ பிரிட்டன் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் தனியாக முன்பணம் செலுத்தும் வழக்கமே அமலில் இருந்த நிலையில், சர் ரோலண்டு ஹில் என்பவர்தான் அஞ்சல்தலை – என்ற ஒரு யோசனையை சிந்தித்து வடிவமைத்தார்.
நடுவே விக்டோரியா மகாராணியின் படம், மேலே ’போஸ்டேஜ்’ என்றும் கீழே ‘ஒன் பென்னி’ என்றும் இரு வார்த்தைகள் – இவற்றை மட்டும் கொண்ட கருப்பு நிற அஞ்சல்தலையே உலகின் முதல் அஞ்சல்தலை. அதன் விலை ஒரு பென்னி என்பதாலும், நிறம் கருப்பு என்பதாலும் மக்கள் அதனை ‘பென்னி பிளாக்’ – என்று அழைக்க, பின்னர் அதுவே பெயராக நிலைத்துவிட்டது.
இந்த பென்னி பிளாக் அடுத்த ஓராண்டுக்கு மட்டும் அஞ்சல் சேவையில் இருந்தது,இதன் மீது அஞ்சல் முத்திரை குத்தப்படும்போது முத்திரை தெளிவாகத் தெரிவதில்லை என்பதால் பென்னி பிளாக் 1841ல் திரும்பப் பெறப்பட்டு, பென்னி ரெட் எனப்படும் சிவப்பு நிறத் தபால்தலை அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகின் முதல் அஞ்சல்தலையில் மட்டுமல்ல, அதன் பின்னர் பிரிட்டன் வெளியிட்ட எந்த அஞ்சல் தலைகளிலும் அந்நாட்டின் பெயர் இடம்பெற்றதே இல்லை, அஞ்சல்தலையைக் கண்டுபிடித்ததால் பிரிட்டன் பெற்ற தனி உரிமையாக இது பார்க்கப்படுகிறது.
Discussion about this post