உலக தாய்மொழிகள் தினத்தையொட்டி ஐ.நா. வெளியிட்டுள்ள 3 ஸ்டாம்ப் ஷீட்களில் ஒன்றில் தமிழின் வணக்கம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு உலக மொழிகளை காக்கவும், அவற்றின் சிறப்பை உணர்த்தவும் தாய்மொழி தினத்தை உருவாக்கியது. கடந்த 2000வது ஆண்டுமுதல் இந்த தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி தொடர்ந்து மொழிகள் குறித்த ஆய்வை நடத்திவரும் யுனெஸ்கோ, உலகில் பேசப்படும் 6 ஆயிரம் மொழிகளில் 43 சதவிகித மொழிகள் அழியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக தாய்மொழிகள் தினத்தையொட்டி ஐ.நா. 3 சிறிய ஸ்டாம்ப் ஷீட்களை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த சிறிய ஸ்டாம்ப் ஷீட்களில் சர்வதேச அளவில் 41 மொழிகளில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழியில் வணக்கம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. 41 மொழிகளில் இந்தியாவில் இருந்து மட்டும் 6 மொழிகள், அதாவது, பெங்காலி, குஜராத்தி இந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை இடம் பெற்றுள்ளன.