பால்… மனிதனின் முதல் உணவு..! பால் மற்றும் பால் பொருள்களின் சிறப்பு அம்சங்களை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதி பால் தினமாக கொண்டாடப்படுகிறது.. இதுகுறித்த செய்தித்தொகுப்பை காணலாம்..
தினசரி காலை காபி டீயில் தொடங்கி, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
அன்றாட உணவில் மிகப்பெரும் பங்கு பாலுக்கு உண்டு. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் இருக்கும் போது அதற்கு இணையாக தருவது பசும்பால் தான்.
பாலின் தேவை, அவசியம், கட்டாயத்தை உணர்ந்த ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஒன்றாம் தேதியை உலக பால் தினமாக, கடந்த 2001 முதல் கடைப்பிடித்து வருகிறது.
கொண்டாடுவதற்கு அவசியமானது தான் என்றாலும், பாலை தவிர்த்து வாழ முடியாதா? என கேள்விகள் எழும்.
அதற்கு பாலில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என தெரிந்துகொள்வோம்…
பாலில் வைட்டமின் சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் இருப்பதால், உடலின் முழு வளர்ச்சிக்கு இது உதவும்.
பாலில் இருக்கும் புரதசத்து, சதை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D, எலும்பிற்கு மிகுந்த வலிமையையும், உறுதியையும் தருகிறது.
குழந்தைகள் பால் பருகுவதால், அவர்களுக்கு பல், கண் மற்றும் ஞாபக சக்தி நல்ல வளர்ச்சி பெறும்.
பாலில், மஞ்சள் தூள் கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது.
இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறைந்த செலவில் ஒரு நாட்டின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது பால் தான்..
இந்தியா போன்ற வேளாண் சார்ந்த நாடுகளின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை நிலையும் பால் உற்பத்தியை சார்ந்தே உள்ளது.
பால்… மனிதனின் முதல் உணவு..!
தாய்ப்பால் வழி தொடரும் இந்த திரவ உணவு, பின்னர் ஆடு, மாடு மூலமாக நமக்கு கிடைத்து தற்போது பவுடர் பால் வாயிலாகவும் தொடர்கிறது..
எப்படி தாய் இல்லாமல் நாமில்லையோ, அதுபோல் பால் இல்லாமலும் நாமில்லை… எந்நாளும் பால் வீணடிக்கப்படுவதை ஆதரிக்க வேண்டாம்…
நியூஸ் ஜெ செய்திகளுக்கு பிரவீன் குமார்…
Discussion about this post