உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 19 வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 19வது லீக் போட்டியில், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. சவுதாம்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தெடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர், எல்வின் லீவிஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதை தொடர்ந்து இங்கிலாந்தின் சிறப்பான பந்து வீச்சில், கிறிஸ் கெயில் 36 ரன்னிலும், ஷை ஹோப் 11 ரன்னிலும், ஷிம்ரோன் ஹெட்மைர் 39 ரன்னிலும் ஹோல்டர் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில், நிதானமாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 63 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் 212 ரன்கள் எடுத்தது.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்த நிலையில், ஜானி பேர்ஸ்டோ 45 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சிறப்பாக ஆடிவந்த கிறிஸ் வோக்ஸ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து ஸ்டோக்ஸ் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இறுதியில், 33 புள்ளி 1 ஓவர்களில், 2 விக்கெட்டை மட்டுமே இழந்து, 213 ரன்களை எடுத்து, இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Discussion about this post