உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டி மழையால் தடைபட்டுள்ளது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 15-வது லீக் போட்டியில், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதி வருகின்றன. இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத நிலையில், தான் விளையாடிய 3 போட்டிகளிலும், தொடர் தோல்விகளை கண்ட தென் ஆப்பிரிக்கா கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டி வருகிறது.
அதேபோல், 2 போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்தது. இந்நிலையில், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது.
சவுதம்ப்டனில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்கா அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா 6 ரன்னிலும், மார்கரம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 29 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
Discussion about this post