உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை எதிர் கொண்ட நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் போட்டியில் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதியது. கார்டிஃபில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் நியூஸிலாந்தின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 52 ரன்களை எடுத்தார். 29.2 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 136 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில், மேட் ஹென்றி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 137 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் குப்தில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் இலங்கையின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை குவித்தனர். இலங்கையின் விக்கெட் வீழ்த்தும் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்காத நிலையில், நியூஸிலாந்து அணி 16.1 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
மார்டின் குப்தில் 73 ரன்களுடனும், காலின் முன்ரோ 58 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். நடப்பு தொடரில் ஒரு இணை எடுத்த அதிகபட்ச ரன்னாகவும் இது பதிவானது.