நூற்றாண்டை கடந்து வானிலை சேவை ஆற்றி வரும் சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அங்கீகார சான்றிதழை வழங்கி ஊக்குவித்துள்ளது உலக வானிலை ஆய்வு மையம், இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை காணலாம்
வானிலையில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம், வெப்பம், சூறை காற்று, நிலநடுக்கம், சுனாமி என அனைத்து வகையான இயற்கை பேரிடர்கள் குறித்தும், முன்னறிவிப்புகளை வழங்கி சேவையாற்றி வருகின்றன வானிலை ஆய்வு மையங்கள். அந்த வகையில் 1792 ஆம் ஆண்டு, இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டது தான் சென்னை வானிலை ஆய்வு மையம். கையேடுகளின் குறிப்புகளில் தொடங்கிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சேவைப் பயணம், இன்று அறிவியல் வளர்ச்சியுடன் மின்னணு முறையில் கணினி
உதவியுடன் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறிந்து இணையதளத்தில் உடனுக்குடன் தரவுகளை பதிவேற்றம் செய்து வருவதாக கூறுகிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
வானிலை சார்ந்த தரவுகளை, தொடர்ந்து பதிவு செய்யும் வானிலை ஆய்வு மையங்களை ஊக்குவிக்கும் விதமாக, உலக தரச் சான்றிதழை வழங்கி வரும் உலக வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் உட்பட இந்தியாவில் 5 வானிலை மையங்களுக்கு இதை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் போன்ற பல்வேறு பேரிடர் காலங்களில், துல்லியமான வானிலை தகவல்களை வழங்கி, உயிரிழப்புகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக, உலகத் தரச்சான்று வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் பாலச்சந்திரன்.
மனித வாழ்வுடன் ஒன்றியிருக்கும் வானிலை மாற்றங்களை, உடனுக்குடன் வழங்கி வரும் சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரம், வானிலை தகவல்களை மேலும் துல்லியமாக, உடனுக்குடன் வழங்க ஊக்குவிக்கும் ஒன்றாகவே உள்ளது.