பனை ஓலைகளில் பலவிதமான கூடைகளை செய்து அசத்தி வரும் அரியலூர் சிறுகடம்பூர் பகுதி பெண்கள் குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
உடல் நலத்திற்கு ஏற்ற பானமாக விளங்கும் பனைமரத்தில் இருந்து பதநீர், கருப்பட்டி, நுங்கு, பனங்கிழங்கு உள்ளிட்டவைகளை சாப்பிடாதவரே இருக்க முடியாது. இதேபோல், பனை ஓலை, மட்டை, நார் என அனைத்தும் அதிகளவில் பயனளித்து வருகின்றன.
பனை, மூங்கில், பிரம்பு போன்றவற்றில் இருந்து பெறப்படும் நார்களையும், ஓலைகளையும், கம்புகளையும் பயன்படுத்தி வீட்டு உபயோக பொருட்களான கூடை, பாய், பை, விசிறி மற்றும் தட்டு உள்ளிட்ட பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூரை சேர்ந்த பெண்கள், பனை ஓலைகளை பயன்படுத்தி அர்ச்சனை கூடை, பழக்கூடை, பவுச், மற்றும் உணவு எடுத்துச் செல்லும் கூடைகள் என பல்வேறு வண்ணங்களில் பல்வேறு பொருட்களை தயாரித்து அசத்தி வருகின்றனர்.
பனை ஓலை மூலம் தயாரிக்கப்படும் இந்த பைகள் உள்ளிட்ட பொருட்கள், தமிழகம் மட்டுமின்றி கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. 25 ரூபாய்க்கு வாங்கப்படும் ஒரு கட்டு ஓலையில், 6 சின்ன பொருட்கள் வரை தயாரிக்கலாம் என்றும் ஒரு பொருளுக்கு குறைந்தது 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர் கூடை தயாரிக்கும் பெண்கள்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பனை ஓலைகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்துவதால், பிளாஸ்டிக் பைகள் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் பெண்கள்…
கிராம பெண்களின் வாழ்வாதாரம் உயர, பனை ஓலை கூடைகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பனை ஓலை கூடைகளை செய்யும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.