சிவசேனாவுடன் பேச்சு நடத்துவதற்காகக் கதவுகள் திறந்தே இருப்பதாக பாஜக தெரிவித்துள்ள நிலையில், சிவசேனா தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவியைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என சிவசேனா கோரி வருகிறது. இதனால் தேர்தல் முடிவு வெளியாகி 11 நாட்கள் ஆன பின்னரும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரத்தில் விரைவில் ஆட்சி அமையும் எனத் தெரிவித்தார். இதையடுத்து சிவசேனாவுடன் பேச்சு நடத்த எப்போதும் கதவு திறந்தே இருப்பதாகவும், முதலமைச்சர் பதவியைத் தவிர வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதன்மையான அமைச்சர் பதவிகளைக் கூட வழங்க பாஜக தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே சிவசேனாவின் ராம்தாஸ் கடம், சஞ்சய் ராவுத் ஆகியோர் ஆளுநர் பகத்சிங் கோசியாரியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
Discussion about this post