கொரோனா அச்சத்தால், ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் திட்டமிட்டபடி தொடங்குமா? – என்ற கேள்வி உலகெங்கும் எழுந்துள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டியின் வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதெல்லாம் போட்டிகள் நிறுத்தப்பட்டன? ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் நடத்துவது குறித்த இறுதி முடிவு எப்போது வெளியாகும்?
2000 ஆண்டுகளுக்கு முன்பு, கிரீஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், மீண்டும் மறு உருவாக்கம் செய்யப்பட்டு கடந்த 1896ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகின்றன. இந்த ஒலிம்பிக் போட்டிகள் ‘வசந்தகால ஒலிம்பிக் போட்டிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இதைபோல குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் உலக நாடுகளால் நடத்தப்படுவது உண்டு.
வசந்தகால ஒலிம்பிக் போட்டிகள் கடைசியாக, 2016ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் நடந்த நிலையில், அதற்கடுத்த வசந்த கால ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 24ஆம் தேதி முதல் நடத்த ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ்சின் தாக்கம் ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுவதால், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடக்குமா? – என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டிக் பவுண்ட், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்த இறுதி முடிவு மே மாதத்தில் எடுக்கப்படும் என்றும், சூழ்நிலைகளைப் பொருத்து ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைக்கவோ, இடத்தை மாற்றவோ திட்டங்கள் உள்ளதாகவும் கூறி உள்ளார். ஆனால் குறித்த தேதியில் போட்டிகள் தொடங்கவில்லை என்றால் அவை ரத்து செய்யப்படவே அதிக வாய்ய்புகள் உள்ளன – என்றே விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ரத்து செய்யப்பட்டால், ஒலிம்பிக்கின் வரலாற்றில் ரத்தான 4ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டியாக அது இருக்கும். முன்னதாகக் கடந்த 1916ஆம் ஆண்டில் முதல் உலகப் போரின் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலாக ரத்து செய்யப்பட்டன.
பின்னர் கடந்த 1944 மற்றும் 1948ஆம் ஆண்டுகளில், இரண்டாம் உலகப் போரின் காரணமாக இரண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டன. ஆனால் இதுவரை சுகாதார காரணங்களுக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது இல்லை.
ஜப்பான் நாடு இதே டோக்கியோவில் கடந்த 1964ஆம் ஆண்டில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. இந்நிலையில் மீண்டும் ஜப்பானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? அல்லது சுகாதாரக் காரணங்களுக்காக ஒலிம்பிக்ஸ் நிறுத்தப்பட்ட முதல் நிகழ்வாக இது அமையுமா? – என்று அடுத்த 2 மாதங்களின் பின்னர்தான் தெரியவரும்.
Discussion about this post