மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என, அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் உண்டானது. எனவே காங்கிரஸ் அரசு அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் கமல்நாத்திற்கு, மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், தங்களுடைய அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கூறினார். தேவை எனில் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post