கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் அண்டை நாடுகளுக்கு தேவைப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா உட்பட பாதிக்கப்பட்ட 30 நாடுகளுக்கும் மருந்து மிக விரைவில் சென்றடைய உள்ளது. இந்தியா வல்லரசு நாடுகளை காக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் தன்னிறைவு அடைந்துவிட்டதா? ஒரு சிறிய அலசல். கொரோனா வைரஸ், இன்று உலகநாடுகள் அனைத்தையும் அச்சுருத்தும் ஒரு கொடிய வைரஸாக உருவெடுத்துள்ளது. இவ்வைரஸிற்கு வல்லரசு நாடுகளும் தப்பவில்லை, இன்னும் சொல்லப்போனால் மிகப்பெரிய வல்லரசுகள் என்று இதுவரை மார்தட்டிய நாடுகள் தான் மிகப்பெரிய உயிர் இழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தன்னாட்டு மக்களின் உயிர்காக்க இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக “ஹைட்ராக்சி குலோரோக்யின்” என்ற மருந்தை உபயோகப்படுத்தலாம் என்று அறிவித்தார், அதை தொடர்ந்து உலகநாடுகளின் கவனம் அனைத்தும் இந்தியாவின் பக்கம் திரும்பியது.மருந்து உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகமுக்கியமானது, உலக தேவைக்கான மருந்து உற்பத்தியில் 50% மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், ஹைட்ராக்சி குளோரோக்யின் உட்பட பல மருந்துகள் அடக்கம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிடம் உதவி கேட்டதற்க்கு மிக முக்கிய காரணம், அமெரிக்காவின் 40% மருந்துகள் இந்தியாவிலிருந்தே பெறப்படுகிறது, அந்நாடு தனது மருந்து கொள்முதலில் இந்தியாவையே பெரிதும் நம்பியுள்ளது. அதுபோலவே, யூரோப்பின் மருந்து தேவையில் 26%, இங்கிலாந்து நாட்டின் மருந்து தேவையில் 25% இந்தியாவிலிருந்து பெறப்படும் மருந்துகள் பூர்த்தி செய்கின்றன. இப்படி இந்திய மருந்துகளின் தேவை உலகம் முழுக்க இருக்கும் நிலையில், கொரோனாவால் அதன் தேவை இன்னும் அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது தந்நாட்டு மக்களுக்கு தேவைப்படும் மருந்துகளை கையிருப்பில் வைத்துள்ளது, அதேநேரத்தில் எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு அதை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியையும் முடுக்கியுள்ளது. இதுதவிற, உதவி கேட்டுள்ள 30 நாடுகளுக்கும் கருணை அடிப்படையில் தேவையான மருந்துகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 13 நாடுகளுக்கு தேவைபடும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும், இந்தியா மருத்துவத்துறையில் பெற்றுள்ள தன்னிறைவையே காட்டுகிறது. இதன் மூலம் உலக வல்லரசுகளை காக்கும், மிகப்பெரிய வல்லரசாக இந்தியா உருவெடுத்துள்ளதா என்ற ஆச்சர்யமும் நம் முன் எழுந்துள்ளது.
Discussion about this post