2017ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நடந்து வரும் குடிமராமத்துப் பணிகளின் மூன்றாம் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 2016ம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால், இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி, இந்த வறட்சியை எதிர்கொள்ளவும், மழைநீரை சேமித்து, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், 2017ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை அறிமுகம் செய்தார். குடிமராமத்துத் திட்டம் என்பது அரசின் உதவியுடன், பொதுமக்கள் தாங்களே தங்கள் பகுதியின் நீர்நிலைகளை தூர்வாரி மேம்படுத்துவது ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் வாய்க்கால் மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், மிகை நீர் கலிங்குகள் மற்றும் குறுக்குக் கட்டுமான அமைப்புகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்திய பின்னர், மீதமுள்ள வளம் மிக்க வண்டல் மண்ணானது விவசாயிகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.
இப்படியாக நீர்நிலைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும், தொழில்களுக்கும் குடிமராமத்து என்ற ஒரே திட்டம் மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.தமிழக முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தினால் 84 ஆண்டுகளாக தூர்வார படாமல் இருந்த மேட்டூர் அணையில் கூட தூர்வாரப்பட்டு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டது.
குடிமராமத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே தமிழகத்தின் 30 மாவட்டங்களில் ஆயிரத்தி159 பணிகள், 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின் 2018ல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மேலும் 1,511 நீர் நிலைகள் 329 கோடி நிதியில் குடிமராமத்து செய்யப்பட்டன.
இவ்வாறாகக் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 429 கோடி ரூபாய் மதிப்பில், தமிழகமெங்கும் 30 மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இதனால் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட, நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு எப்போதும் மழையை எதிர் கொள்ளத் தயாராக உள்ளன.
இந்நிலையில் 2019-20ம் ஆண்டுகளுக்கான மூன்றாம் கட்ட குடிமராமத்துப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்காக 500 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் தமிழகமெங்கும் 1,827 பணிகள் மெற்கொள்ளப்பட உள்ளன.
வரலாற்றின் படி பார்த்தால் கல்வெட்டுகளின்படி கரிகாலச் சோழன் காலத்தில் தமிழகத்தில் காணப்பட்ட திட்டமே குடிமராமத்துத் திட்டம் ஆகும். அந்தக் குடிமராமத்துத் திட்டத்தை தமிழக முதல்வர் மீட்டெடுத்து மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளார். மேலும் குடிமராமத்துத் திட்டம் பொதுப்பணித் துறையால் திட்டமிடப்பட்டு மக்களால் செயல்படுத்தப்படுபவை.
எனவே, தங்களது ஊரில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க அந்த ஊரின் பொதுமக்கள் ஒரு குழுவாகத் திரண்டு கிராமப் பஞ்சாயத்தின் செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராம சபைக்கூட்டம் நடத்தும்படி எழுத்துபூர்வமாக வலியுறுத்தலாம்.
அவர்கள் மறுத்தால் செயல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். இதன் மூலம் திட்டங்கள் விரைவில் அங்கு செயல்படுத்தப்படும்.
குடிமராமத்துத் திட்டத்தில் பங்கேற்க வல்லுநர்கள், பொறியாளர்கள் ஆகியோரையும் தமிழக அரசு அழைக்கிறது. வல்லுநர்கள், பொறியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும் குழுவினரின் அனுபவங்களைப் புதிய திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது.
Discussion about this post