வனத்துறையிடம் பிடிபட்ட காட்டு யானை ‘அரிசி ராஜா’, வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மற்றும் அர்த்தநாரிபாளையம் கிராம மக்களை காட்டு யானை ‘அரிசி ராஜா’ அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து ‘அரிசி ராஜா’-வை பிடிக்க கும்கி யானைகள் கலீம், கபில்தேவ் வரவழைக்கப்பட்டன. வனத்துறையிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வந்த ‘அரிசி ராஜா’ நேற்றிரவு ஆண்டியூரில் உள்ள தென்னந்தோப்பில் பதுங்கி இருந்தது. அப்போது, வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை சுற்றிவளைத்தனர். மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை ‘அரிசி ராஜா’-வை அவர்கள் பிடித்தனர்.
இதையடுத்து கும்கி யானை கலீம் உதவியுடன் காட்டு யானை ‘அரிசி ராஜா’ லாரியில் ஏற்றப்பட்டது. பிடிபட்ட காட்டு யானையை டாப்ஸ்லிப் அருகேயுள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர். நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டதால் நவமலை மற்றும் அர்த்தநாரிபாளையம் கிராம மக்களை நிம்மதி அடைந்துள்ளனர்.
Discussion about this post