விடுதியில் ஒதுக்கப்பட்ட அறை பிடிக்காத காரணத்தால்தான், சி.எஸ்.கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி, துபாயில் தொடங்குகிறது. இதையடுத்து, அனைத்து அணி வீரர்களும் துபாயில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சொந்த பிரச்னை காரணமாக சி.எஸ்.கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ரெய்னாவின் இந்த அறிவிப்பால், சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், வீரர்களுக்கான அறை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே தொடரில் இருந்து ரெய்னா விலகியதாக கூறப்படுகிறது. பால்கனியுடன் தோனிக்கு ஒதுக்கியது போலவே தமக்கும் அறை ஒதுக்க வேண்டும் என ரெய்னா வலியுறுத்தியதாகவும், ஆனால் உடனடியாக அதுபோன்ற அறை ஒதுக்க முடியாது என அணி நிர்வாகம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் தான் ரெய்னா தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
ரெய்னாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், தலைக்கனம் உருவானால் சில வீரர்கள் இதுபோன்று நடந்து கொள்வார்கள் என விமர்சித்துள்ளார். சி.எஸ்.கே அணியில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய கேப்டன் தோனி, வீரர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Discussion about this post