கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க குறைந்தது ஓராண்டு ஆகலாம் என கூறப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு கொரோனா நம்மிடையே இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக பல கோடி ரூபாய் நிதியை பல்வேறு நாடுகள் ஒதுக்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமில்லை என்று கூறும் சில ஆய்வாளர்கள், கொரோனா வைரஸூடனேயே வாழ, அனைவரும் தயாராக வேண்டும் என்று பதற வைக்கும் தகவலையும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய, லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் டேவிட் நபரோ, இன்னும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத சில வைரஸ்கள் உள்ளதாக குறிப்பிட்டார். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்ற முழுமையான அனுமானத்திற்கு நம்மால் வர முடியாது என்றும்தெரிவித்துள்ளார். தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் துறை இயக்குநர் Anthony Fauci கருத்து தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு எச்ஐவி வைரஸுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என அறிவித்திருந்தார் அமெரிக்க சுகாதார துறை செயலாளர் மார்கரெட் ஹெக்லர்… ஆனால் 2 ஆண்டுகளில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனைத்தொடர்ந்து 1997ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் எச்ஐவி-க்கு மருந்து கண்டுப்பிடிப்போம் என சவால் விடுத்தார். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்துள்ளபோதும், 3 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியபோதும் இதுவரை எச்ஐவி வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது துரதிர்ஷடவசமான ஒன்று…. எச்ஐவி போன்றே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத பல வைரஸ்கள் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மருந்து கண்டுபிடிக்க கால தாமதமாவது குறித்து பதிலளித்த மருத்துவர் டேவிட் நபரோ, “நாங்கள் உயிரியல் அமைப்புகளை கையாளுகிறோம். மாறாக, இயந்திரங்களை கையாளவில்லை” என்று பதிலளித்துள்ளார். தற்போது கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிம்பன்சி வைரஸிலிருந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி வருகிறது. இருப்பினும், கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கு பல காலம் ஆகும் என்பதையும் மருத்துவ நிபுணர்கள் நினைவூட்டுகின்றனர். அதுவரை நாம் கொரோனாவுடன்தான் வாழ வேண்டியிருக்கும் என்றும், இதன் காரணமாக நமது வாழ்க்கை முறை, பணிச்சூழல் ஆகியவை முற்றிலும் மாற்றமடையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post