தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களாக முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் கொரோனா தொற்று பரவல் சற்றும் குறையவில்லை.
ஊரடங்கை அமல்படுத்துவதில் காட்டப்படும் மெத்தனப்போக்கே இதற்கு காரணம்.
தமிழ்நாட்டில் பாதிப்பு குறையாத நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக அரசு கூறுகிறது.
ஆனால் உண்மை நிலை என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வந்தது.
கடந்த 16ம் தேதி, தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 247 ஆக இருந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு 33 ஆயிரத்து181 ஆக இருந்தது.
ஆனால் நேற்று சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் பாதிப்பை குறைத்து சாதனை செய்து விட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது.
ஆனால் உண்மை நிலை என்ன என்று பார்த்தோமானால், சென்னையில் தங்கி இருந்த வெளி மாவட்ட மக்கள் வெளியேறியதே தொற்று பாதிப்பு குறைய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும்,
22ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றி வந்தவர்களில், சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியதாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதனால் தமிழ்நாடு அரசு எதிர்பார்த்தது போல் சென்னையில் பாதிப்பு குறைந்தது. அதேவேளையில் உள்மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை மறுக்க முடியாது.
கோவையில் 16ம் தேதி 3 ஆயிரத்து 166 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது 4 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 16ம் தேதி ஆயிரத்து 569 ஆக இருந்த பாதிப்பு, தற்போது ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் ஆயிரத்து 95 ஆக இருந்த பாதிப்பு, 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து 1538 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், கடந்த 16ம் தேதி 439 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது ஆயிரத்து198 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 232 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் திருப்பூரில் 919 ஆக இருந்த தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை, ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 16ம் தேதி 311பேர் தொற்று பாதிப்புக்கு பலியான நிலையில், அது தற்போது 475 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 11 நாட்களில், ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 456 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில், சென்னையைப் போன்று, போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் இல்லாத நிலையில், வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு என பல இடையூறுகளை சந்தித்தாலும், உயிர்கொல்லி நோயான கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே தீர்வு என்பதால் கசப்பு மருந்தாக பொதுமக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால் 3 வாரங்களாக அமலில் உள்ள ஊரடங்கின் பலனை, தமிழ்நாடு அரசு அறுவடை செய்ததா என்றால், இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவதில், ஆரம்பம் முதலே தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டி வருகிறது.
இதனால் ஊரடங்கு அமல்படுத்தி 20 நாட்கள் நிறைவடைந்த போதும், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து, இந்தியாவிலே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post