ஆண்களின் உரிமையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ’பெண்கள் நம் நாட்டின் கண்கள்’ என்று பாடும் நாம், ஆண்களை பாராட்ட எந்த ஒரு கவிதைகளையும் பாடுவது இல்லை. ஆண்கள் வலிமையானவர்கள், தைரியமானவர்கள் அவர்களுக்காக ஏன் ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என கேட்பவரா நீங்கள்? இதை படியுங்கள்…
ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தவிட்டால் போதும்… ’சிங்கக்குட்டி பொறந்துட்டான்’ இனி அவன் பார்த்து கொள்வான் என பிறந்த குழந்தையிலேயே சுமையை திணிக்கின்றனர் பெற்றோர். கொஞ்சம் வளரும் போது தான் அவனுக்கே தெரிகிறது நம்மை நம்பி தான் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று.
பெண் குழந்தையை 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பாதவர்கள், ஆண் குழந்தையை மட்டும்’பையன் தானே அவன் எத்தன மணிக்கு வந்தா என்னா? என்று அலட்சியத்தோடு இருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவை போல ஆண்களுக்கும் நடப்பது உண்டு என்பதை பெற்றோர்கள் அறிந்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும்.
பெண்களை போலவே ஆண்களுக்கும் அழுகை வரும். ஆனால் ‘ஆண் பிள்ளை அழுகலாமா’ என்று கேட்டு அழுகும் உரிமையை கூட பரித்து வைத்திருக்கிறோம். பெண் உரிமை, பெண் பாதுகாப்பு என்று போராட்டம் நடத்துபவர்கள் பின்னால், ஒரு கணவனாக, ஒரு அண்ணனாக, ஒரு தந்தையாக, ஒரு ஆண் தான் நிற்கிறான் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆண் இல்லாமல் பெண்களால் இருக்க முடியும், பெண் இல்லாமல் ஆண்களால் இருக்க முடியும். ஆனால் இருவரும் தங்களுக்கான உரிமையை பகிர்ந்துக்கொண்டு ஒன்றாக இணைந்து வாழ்வது தான் வாழ்க்கை.
தன் சந்தோஷத்தை மறந்து வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக வாழும் ஆண்கள் பாராட்டிற்குரியவர்களே..! அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்…
Discussion about this post