இந்திய அரசின் விண்வெளித் திட்டங்கள் நிலவை நெருங்கிவரும் நிலையில், விண்வெளியிலும், நிலா உள்ளிட்ட பிற கோள்களிலும் தனியாரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் புதிய விண்வெளிச் சட்டம் ஒன்றை இந்திய அரசு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன… இந்தியாவுக்கு ஏன் தேவை விண்வெளிச் சட்டங்கள்? – இது குறித்தச் செய்தி தொகுப்பு…….
அமெரிக்கா – ரஷ்யா நாடுகளிடையேயான வல்லரசுப் போட்டியே நிலவு பற்றிய ஆய்வுகள் வேகமெடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த வகையில் 50 ஆண்டுகளுக்கும் முன்பே பூமியைத் தாண்டி நிலவுக்கும் மனிதர்களின் ஆதிக்கப்போட்டி சென்றுவிட்டது. இதனால் அப்போதே நிலவையும் விண்வெளியையும் வல்லரசுகளோ, உலகப் பணகாரர்களோ உரிமை கொண்டாடக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதன் விளைவாக 1967ல் ஓ.எஸ்.டி. எனப்படும் சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் – என்ற ஒன்று
உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி விண்வெளியில் உள்ள நிலவும், பிற கோள்களும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை. எந்த ஒரு நாடும் நிலவுக்கு முழுவதுமாக சொந்தம் கொண்டாட முடியாது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பின்னர் நிலவில் ஆய்வுகள் தொடர்ந்தன.
இந்நிலையில் பின்னர், நிலவு குறித்த ஆய்வுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுவதைக் கண்ட 20 உலகநாடுகள் சேர்ந்து, நிலவு ஒப்பந்தம்’ – என்ற புதிய ஒப்பந்தத்தை 1979ல் உருவாக்கின. ‘அனைத்து நாடுகளும் இணைந்து நிலவில் ஒரு ஆய்வு அமைப்பை தொடங்கலாம், நிலவில் உள்ள வளங்களை அனைவரும் பயன்படுத்தலாம்’ – என்ற எண்ணத்தை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏற்கவில்லை!. மற்ற நாடுகளுக்கும் இந்த இரு பணிய வைக்கும் ஆற்றல் இல்லை. அதனால் உலக நாடுகள் பின்னர் நிலவு பற்றி அதிகம் பேசவில்லை.
இந்நிலையில், சந்திராயன் 2 மூலம் நிலவை நெருங்கி உள்ள இந்தியா விரைவில் நிலவுக்கு ஆட்களையும் அனுப்ப உள்ளதால், விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சட்டத்தை இந்தியா எழுத வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள இரண்டு விண்வெளிச் சட்டங்களை மீறாமல், அதே சமயம் விண்வெளியில் இந்தியாவின் இடத்தை உறுதி செய்ய இந்தச் சட்டம் அவசியம்.
இதன் மூலம் நிலவு உள்ளிட்ட கோள்களில் இந்தியாவின் ஆய்வுப் பகுதிகளை பிற நாடுகளிடம் இருந்து காப்பதோடு, விண்வெளி ஆய்வில் ஈடுபடும் தனி நபர்களிடம் இருந்தும் காத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஓ.எஸ்.டி. – ஒப்பந்தம் நிலவின் மீது அனைத்து மனிதர்களுக்கும் சமமான உரிமையைக் கொடுத்து உள்ளது, அதில் நாடுகளுக்கு
என்று எந்த கூடுதல் சலுகைகளும் இல்லை.
இந்த புதிய சட்டத்திற்கான முயற்சிகளை கடந்த 2017 முதல் இந்தியா மேற்கொண்டு வருகின்றது. இந்த சட்டம் முன்னர் ‘ஸ்பேஸ் ஆக்டிவிட்டீஸ் பில் 2017’ – என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் விண்வெளி ஆய்வில் ஈடுபடும் தனி நபர்கள் அதற்காக இந்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். அத்தோடு இச்சட்டம் புவியின் சுற்றுச் சூழலையும் விண்வெளி, பிற கோள்கள் ஆகியவற்றையும் மாசு படுத்துவதைக் குற்றம் என அறிவித்து உள்ளது.
இந்தச் சட்டம் அமலான பின்னர் இந்திய அரசின் அனுமதி பெறாமல் விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கும், விண்வெளியை மாசுபடுத்துபவர்களுக்கும் 3 ஆண்டுகள் வரையிலான சிறையோ, ஓரு கோடி வரையிலான அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
அத்தோடு தனிநபர்களின் விண்வெளி ஆய்வுகள் மக்களின் உடல்நலன், நாட்டின் இறையாண்மை போன்றவற்றை பாதிக்காமல் இருப்பதையும் இந்தச் சட்டம் உறுதி செய்யும்.
ஸ்பேஸ் எக்ஸ் – போன்ற தனியார் நிறுவனங்கள் இப்போது ராக்கெட் ஆய்வுகளில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலை தொடரும் என்றால், தற்போது கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்படுவதைப் போல எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் கூட ஹேக் செய்யப்படலாம், அது போன்ற சூழல்களில் இந்தச் சட்டம் இந்தியாவுக்கு உதவும். இந்தப் புதிய சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
Discussion about this post