பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சர் தனிப் பிரிவு இணையதளத்தில், 7 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது, திமுக ஆட்சியில் முதலமைச்சர் தனிப் பிரிவு, கவனம் இன்றி செயல்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் நிலவும் குழப்பங்கள் குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான் முதலமைச்சரின் தனிப் பிரிவு.
2011ம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, புரட்சித் தலைவி ஜெயலலிதா மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த தனிப்பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் தனிப்பிரிவில் தனி கவனம் செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி காட்டிய முனைப்பு காரணமாக, பொதுமக்களின் மனுக்கள் மீதான கவனம் 95 சதவீதமாக உயர்ந்தது.
இதனால், மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது முதலமைச்சரின் தனிப்பிரிவு.
ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிய நிலையில், இன்னமும் முழுமையடையாமல் தள்ளாடி கொண்டிருக்கிறது தனிப்பிரிவு.
தேர்தலுக்கு முன் நடைபெற்ற பிரசாரங்களில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்திருந்தார் ஸ்டாலின்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றபின், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, அதனையும் முழுமையடையாமல் வைத்துள்ளது தமிழக அரசு.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் கைப்பேசி எண் உட்பட, பல்வேறு விவரங்களை முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் தமிழக அரசு பதிவேற்றம் செய்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் மயிலாடுதுறை நீங்கலாக உள்ள 37 மாவட்டங்களில், 30 மாவட்டங்களுக்கு மட்டுமே கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பதிவேற்றம் செய்துள்ளனர்.
கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, திருப்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களின் தகவல்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை, எங்கு, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
திமுகவுக்கு வாக்காளிக்காதவர்களையும் தங்கள் பணிகள் மூலம் சிந்திக்க வைப்போம் என்று ஸ்டாலின் சொன்னது இதுதானா? என மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் சிவா…
Discussion about this post