திண்ணையில் கிடந்த ஜிபி முத்துவிற்கு திடுக்கென்று அடித்திருக்கிறது அதிர்ஷ்டம். காமெடி பீஸ் என்று எள்ளி நகையாடப் பட்டவர், காருக்கு சொந்தக்காரராகி கண் விரிய வைத்திருக்கிறார் . எப்படி சாத்தியமானது இந்த வெற்றி… .?
ஜிபி முத்து…. டிக்டாக், போட்டு விட்டுப் போன புதிர். லைக்கிற்கும் கமெண்டிற்கும் ஒவ்வொரு மியூசரும் உயிரை கொடுத்து போராடி கொண்டிருக்கையில் எந்த மெனக்கெடலும் இல்லாமல் இணைய வாசிகளின் ENJOYMENT ஆனவர். டிக்டாக்கில், சீனாக்காரனே பொறமை கொள்ளும் அளவிற்கு செல்வாக்கோடு வலம் வந்தவர், ஜிபி முத்து…
டிக்டாக் தடை, ஏனைய மியூசரை போலவே இவர் தலையிலும் இடியாக இறங்கியது. பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க தற்கொலை மிரட்டல் கூட விடுத்து பார்த்தார். மத்திய அரசு மனம் இறங்க வில்லை. எனவே தனது கை, கால் நடுக்கத்தை கட்டுப்படுத்த யு டியூபில் தன் லூட்டியை தொடங்கினார் உடன்குடி மைனர்
வருவாய் இல்லாத டிக்டாக்கிலேயே நாளொன்றுக்கு 70 வீடியோ பதிவிட்ட தலைவர், லட்சங்களை அள்ளித்தரும் யு டியூபை விட்டு வைப்பாரா….? அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவாக பதிவேற்றினார். கடுகு தாளிப்பது; காட்டிற்குள் அமர்ந்து கடிதம் வாசிப்பது என ஏகப்பட்ட குரங்கு சேட்டைகள். விளைவு மூன்றரை லட்சம் சப்கிரைபர்கள்; அதிக வருமானம் என நிகழ்கால ஆச்சரியமாகி இருக்கிறார்.
ஜிபி முத்துவிற்கு ஆட தெரியாது, பாட தெரியாது, நடிப்பு…. அது சுட்டுப் போட்டாலும் வராது. இருப்பினும் அவர் வீடியோக்கள் லட்சங்களை தாண்டுகின்றன. வீடியோ பதிவிட்ட அடுத்த நொடி கமெண்ட் பாக்ஸ் நிறைகிறது. அவர் வீட்டிற்கு கடிதங்கள் டெலிவரி செய்தே தபால்காரர் டயர்டு ஆகிறார். இதெல்லாம் எப்படி நடக்கிறது என எவருக்குமே புரிய வில்லை.
உடன்குடி என்று குக்கிராமத்தில் பிறந்தவர், தொழிலில் நொடிந்தவர்; வறுமை கழுத்தை நெரிக்க தற்கொலைக்கு முயன்றவர்; அடுத்த வேளை சாப்பாடிற்கே யாகசம் பெற வேண்டிய சூழலில் இருந்த ஜிபி முத்துவை இணையம் இன்று கோபுரத்தில் அமர வைத்திருக்கிறது. சொகுசு கார் வாங்கும் அளவிற்கு சொதப்பல் நாயகனுக்கு கொழித்திருக்கிறது யு டியூபில் வருமானம்.
நேற்று வரை கேலிப் பொருளாக இருந்தவர் இன்று காரில் வலம் வருகிறார். திறமையோ, அதிர்ஷமோ எது வேண்டுமானால் இருக்கட்டும். அவர் இன்று உச்சம் அடைந்திருக்கிறார். இன்றைய தேதியில் அவருக்கு ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு பேப்பர் ஐடி யாவது ரசிகராக இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் நமக்கு ஒன்றுதான் தோன்றுகிறது. சேகுவாராக்கள் மட்டுமல்ல ஜிபி முத்துகளிடமும் நாம் கற்று கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது.
Discussion about this post