உலக மக்களின் கவனத்தை பெற்ற கிரேட்டா தன்பெர்க்… யார் அவர்?

ஒரு சிறிய நாட்டிலிருந்து புறப்பட்டு வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு சென்று, அந்நாட்டு அதிபருக்கு எதிராக குரல் கொடுப்பதெல்லாம் ஒரு வரலாற்று நிகழ்வு. அதனை தன் 16 வயதில் செய்துகாட்டியுள்ளார் காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்.

கிரேட்டாதன் பெர்க்… இந்த பெயர் தற்போது உலகின் பல மூளைகளிலும் ஒலிக்கின்றது. காலநிலை மாற்றத்துக்கு எதிராக தனி ஆளாக குரல் கொடுக்கத் தொடங்கி, தற்போது ஒட்டுமொத்த உலகமும் பின்னாள் அணிதிரளும் வண்ணம் உயர்ந்துள்ளார் 16 வயதான சிறுமி கிரேட்டா.

இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஸ்வீடனில் சிறிய பாதாகையுடன் தன் போராட்டத்தை முன்னெடுக்கும் போது இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. பிறகு வெள்ளிக்கிழமை தோறும் தன் பள்ளியை புறக்கணித்து, ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் கால நிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார் கிரேட்டா. அவரின் கோரிக்கையை ஏற்று மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் பின்னாள் வர தொடங்கினர்.

Friday For Future என்ற அமைப்பை தொடங்கி பல நாடுகளுக்கு சென்று காலநிலை மாற்றம் குறித்துப் பேசி வந்தார். காலநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் ஆகியவற்றுக்கு எதிராக உலகத் தலைவர்கள் செயல்பட்டு திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்பதுதான் இவரின் பிரதான கோரிக்கை. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலநிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிறுமி கிரேட்டாவும், கலந்துகொண்டார்.

“நாங்கள் உங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்போம்”என ஐ.நா-வில், கிரேட்டா தன் உரையைத் தொடங்கியதும் கைத்தட்டல்கள் ஆர்பரித்தன.

“இங்கு நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளது. என் பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சுற்றுச்சூழல் சிதைந்து நாம் அழிவின் தொடக்கத்தில் உள்ளோம். ஆனால், நீங்கள் பொருளாதாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வெற்று வார்த்தைகளால் என் குழந்தைப் பருவம் காலியாக உள்ளது. வருங்கால இளைஞர்களின் அனைத்துக் கண்களும் தற்போது உங்கள் மீதுதான் உள்ளது. இனியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நாங்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கவே மாட்டோம்” என ஆவேசமாகத் தன் உரையை முடித்தார்.

கிரேட்டா ஐ.நா-வில் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கோபத்தை அழுகை மூலம் வெளிப்படுத்தினார். பின்னர், அதே மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அமெரிக்க அதிபர் டிரம்பும் வந்துள்ளார். அவரை நேரில் பார்த்ததும் கிரேட்டா கோபத்துடன் காட்டிய முகபாவனை இணையத்தில் வைரலானது.

சிலநாட்களுக்கு முன்பு நியூயார்க்கில் கிரேட்டா நடத்திய பேரணி உலக தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 16 வயது சிறுமியின் அழைப்பை ஏற்று 156 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஒரே நாளில் ஒன்று கூடினர். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக ஐ.நா.வில் பேசிய 16 வயது கிரேட்டாவின் குரல் உலக மக்களின் மனசாட்சியாக ஒலிக்கின்றது என்பதுதான் உண்மை…

Exit mobile version